Thursday 16 April 2015

நாட்டின் முதல் ஸ்மார்ட் சிட்டி வந்தாச்சு: குஜராத்தின் காந்தி நகரில் மும்முரம்





காந்திநகர்: நாட்டின் முதல், 'ஸ்மார்ட் சிட்டி' குஜராத் தலைநகர் காந்தி நகரில் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை, 900 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள இந்த நகரில், வீட்டுக்கு வீடு தகவல் தொடர்பு வசதி, குழாயை திறந்தால் நல்ல தண்ணீர், வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்ற, பெரும்பாலான இந்தியர்களுக்கு கிடைக்காத வசதிகள் உள்ளன.

இதுபோன்ற ஸ்மார்ட் சிட்டிகள், ஆந்திராவின் விசாகப்பட்டினம் உட்பட சில இடங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றன.கிராமப்புறங்களிலும், நகர்புறங்களில் உள்ளது போன்ற வசதிகள், நகர்புறங்களில் அமைய வேண்டும். அத்தகைய நிலை ஏற்பட்டால், கிராமப்புறங்களில் இருப்பவர்கள், நகர்புறங்களை நோக்கி இடம்பெயர மாட்டார்கள் என்பது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு திட்டங்களில் ஒன்று.

மேலும் சிக்கல்:

எனினும், அடுத்து வந்த அரசுகள், 'புரா' எனப்படும் அப்துல் கலாமின் கனவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. கடந்த ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்த, பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும். அதற்காக, 60 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என அறிவித்தது.அதற்கு ஒரு கணக்கையும் மத்திய அரசு தெரிவித்தது. இப்போதைய நகர்புற மக்கள்தொகை, 40 கோடியாக உள்ளது. வரும் 2050ல், இந்த எண்ணிக்கை, 81.4 கோடியாக உயர்ந்து விடும். அத்தகைய சூழ்நிலையில், இப்போதே பிதுங்கிக் கொண்டிருக்கும் பெருநகரங்கள் மற்றும் நகரங்களின் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்.

செயல்பாட்டிலும்...:

எனவே, 2022க்குள், 100 ஸ்மார்ட் சிட்டிகள் ஏற்படுத்தப்படும். அதற்காக, 60 லட்சம் கோடி ரூபாய் படிப்படியாக செலவிடப்படும் என அறிவித்தது.வெறுமனே பேச்சில் மட்டும் இல்லாமல், செயல்பாட்டிலும் இறங்கியதால், இப்போது காந்தி நகரில், நாட்டின் முதல் ஸ்மார்ட் சிட்டி உருவாகியுள்ளது.குஜராத்தின் வர்த்தக தலைநகரம் ஆமதாபாத் மற்றும் அரசியல் தலைநகரம் காந்தி நகருக்கு மத்தியில், இந்நகரம் அமைந்துள்ளது. மொத்தம், 886 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த நகரின் ஒரு கரையில், சபர்மதி நதியும், மறுகரையில், தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது வெகுசிறப்பாக கருதப்படுகிறது.சிங்கப்பூர், சீனாவின் ஷாங்காய் போன்ற நகரங்களில் இருப்பது போன்ற பசுமை தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட, பல மாடி வளாகம், காந்தி நகரில் ஸ்மார்ட் சிட்டி உருவாகி வருகிறது என்பதை உணர்த்துகிறது. இப்போதைய நிலையில், 900 கோடி ரூபாய் இந்த ஸ்மார்ட் சிட்டிக்கு செலவிடப்பட்டுஉள்ளது. தொடர்ந்து பல ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், முழுமையான ஸ்மார்ட் சிட்டி, காந்தி நகரில் அமைந்து விடும்.

'கிப்ட்' நகரம்:

குஜராத்தில் தயாராகி வரும் ஸ்மார்ட் சிட்டியின் பெயர், 'கிப்ட்.' குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகர் என்ற பெயரில் இது அழைக்கப்படும். மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.நாட்டின் முதல் திட்டமிட்ட நகரம், சண்டிகர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இந்த நகரம் கட்டப்படாததால், நகரம் விரிவடைய முடியாமல், உள்ளேயே பிதுங்கி வருகிறது.அதுபோன்ற சிக்கல்கள் இருக்கக் கூடாது என்பதற்காக, அமைந்து வரும் ஸ்மார்ட் சிட்டிகள் மற்றும் இனிமேல் அமையும் சிட்டிகளில், கட்டடங் களுக்கு அடியில், உள்கட்டமைப்பு வசதிகள், பயன்பாட்டு வசதிகள் மேற் கொள்ளப்படும். இதனால், மேற்புற நிலத்தின் பயன்பாடு தேவை குறையும்.

ஏகப்பட்ட வசதிகள்:

நாட்டின் பெரிய நகரங்களில் இருக்கும் வசதிகளை விட, அதிகமான, சிறப்பான பல வசதிகள், ஸ்மார்ட் சிட்டியில் ஏற்படுத்தப்பட உள்ளன. காந்திநகர் ஸ்மார்ட் சிட்டியில், முதற்கட்டமாக, அனைத்து வளாகங்களிலும், தகவல் தொடர்பு வசதிகள், குழாயை திறந்ததும் தண்ணீர், கழிவு நீர் சுத்திகரிப்பு, சிக்கன நீர் மேலாண்மை, குறைந்த எரிபொருள் பயன்பாடு போன்ற வசதிகள் உள்ளன.மேலும், தரமான சாலை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், மாசற்ற நகரியங்கள், குப்பைகள் இல்லாத வீதிகள் என, சிங்கப்பூரை நினைவுபடுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வேறு எங்கெங்கு?

நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தாலும், குஜராத்தின் தோலேரா, காந்திநகர், சூரத், ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தான், ஸ்மார்ட் சிட்டிகள் வளர்ந்து வருகின்றன.கடந்த ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு, இந்த ஆண்டின் பட்ஜெட்டில், 6,000 கோடி ஒதுக்கியுள்ளது. இது போக, பிரபல பன்னாட்டு நிறுவனங்களான, மைக்ரோசாப்ட், ஐ.பி.எம்., சிஸ்கோ போன்ற நிறுவனங்களின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இந்த நகரங்கள் அமைக்கப்படுகின்றன.
பிரச்னைகள் என்னென்ன?


*ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதற்கு முதல் முட்டுக்கட்டையாக இருப்பது நிலம். தனியார் வசம் இருக்கும் நிலங்களை பெறுவது மிகவும் சிரமமாக இருப்பதால், முதற்கட்டமாக அரசு நிலங்களில், ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
*திட்டமிடல், அடுத்த பிரச்னையாக உள்ளது. சிங்கப்பூர், துபாய், மும்பை போன்ற நகரங்களை முன்மாதிரியாக கொண்டு, ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்பட உள்ளன.
*கோடிக்கணக்கில் பணத்தை விழுங்கும் ஸ்மார்ட் சிட்டிகளுக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. அவற்றை திரட்டுவது அரசுகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
Advertisement


தொடர்புடைய செய்திகள்:

No comments: