Friday 17 April 2015

தலையாட்டி பொம்மை கூட தலையாட்டும்; பன்னீரிடம் அதுவும் இல்லை: ஸ்டாலின்

தலையாட்டி பொம்மை கூட தலையாட்டும்; பன்னீரிடம் அதுவும் இல்லை: ஸ்டாலின்

சென்னை: 'தலையாட்டி பொம்மை கூட தலையை ஆட்டும்; முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அதுவும் இல்லை' என, சென்னையில் நடந்த, கட்சியின் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் மா.சுப்ரமணியன் தலைமையில், கொட்டிவாக்கத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. பல கட்சிகளைச் சேர்ந்த, 5,000 பேர் தி.மு.க.,வில் ஸ்டாலின் முன்னிலையில் சேர்ந்தனர். அப்போது அவர் பேசியதாவது: இன்று தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல; காட்சி. முதல்வர் எப்படி இருக்கிறார் என்பது, எல்லோருக்கும் தெரியும். தலையாட்டி பொம்மை கூட தலையை ஆட்டும்; இவரிடம் அதுவும் இல்லை. மாநிலம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது; அதை தீர்க்க வழியில்லை. கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை வரும் என்று தெரிந்தும், இத்தனை அலட்சியம் ஏன்? தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது என்பதற்காக, வேலூர் குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். இதற்காக போராட்டம் அறிவித்ததால், தண்ணீர் தருவதாக தவறான தகவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் வேலையை முழுமையாக முடிக்கவில்லை என்கிற ஆதாரம் உள்ளது. அதை வைத்து நான், விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன். வடசென்னை மீஞ்சூரில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில் தான் அறிவித்தனர். ஆனால், எங்கள் ஆட்சியில் அதை செய்து முடித்தோம். குடிநீருக்காக போலீசாரின் மனைவிகளும், போராடும் சூழ்நிலை தமிழகத்தில் தான் இருக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியை, ஒடிசாவுக்கு மாற்றுகின்றனர்; அதில் சதி இருக்கிறது; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க சிலர் நடத்தும் கூத்து தான் இதெல்லாம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்பதே கிடையாது. கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை; எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்களை கட்டினோம். மெட்ரோ ரயில் திட்டமும் கொண்டு வரப்பட்டது; அந்த திட்டம் மந்த நிலையில் செல்கிறது. அம்மையார் வழக்கில் இருந்து விடுதலை ஆனதும், துவக்க விழா நடத்துவராம். மெட்ரோ ரயில் திட்ட பணிகளை, உடனடியாக முடிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments: