Friday 17 April 2015

அதிகாரி மரணத்திற்கு காரணமானவர்கள் யார்? 'அக்ரி' தெரியப்படுத்த கருணாநிதி யோசனை


சென்னை: 'அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் வாக்குமூலம் கொடுத்தால், முத்துக்குமாரசாமியின் மரணத்திற்கு உண்மையான காரணமானவர்கள், உலகத்திற்கு தெரிய வரும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிகார வேட்டை:

அவரது அறிக்கை: அ.தி.மு.க., அமைச்சரவையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போல, இன்னும் அவரை விட கூடுதலாக, அதிகார வேட்கையோடு நடந்து கொள்ளும் அமைச்சர்கள் பலர் உண்டு. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என்றும் பாராமல், அரசு அதிகாரிகள் என்றும் மதிக்காமல், நேர்மையான மனிதர்களை நித்தமும், இவர்கள் துன்புறுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.
செத்து பிழைத்தபடி...:

முத்துக்குமாரசாமியை போல, அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லையே தவிர, செத்து பிழைத்தபடி தான் இருக்கின்றனர். அக்ரியும் சரி, மற்ற அமைச்சர்களும் சரி, அதிகாரிகளை துன்புறுத்தி வசூல் வேட்டையில் இறங்குவது, அவர்களுக்காக மட்டும் தானா என்ற அடிப்படையான கேள்வியை, யாரும் எழுப்பிவில்லையே ஏன்? வேளாண் துறை அதிகாரி செந்தில், 'மறைந்த முத்துக்குமாரசாமியை வலியுறுத்தி, மிரட்டிப் பணம் வசூலிக்கும்படி அமைச்சர் கூறினார். எனவே, நான் அவ்வாறு அந்த அதிகாரியை மிரட்டினேன்' என, வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உலகிற்கு தெரியும்:

அந்த அதிகாரியை போல, அக்ரியும் வாக்குமூலம் கொடுத்தால், முத்துக்குமாரசாமியின் மரணத்திற்கு, உண்மையான காரணமானவர்கள் உலகத்திற்கு தெரியவரும். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

No comments: