Thursday 16 April 2015

ராகுல் போனதிலும் குழப்பம்...வந்ததிலும் குழப்பம்

Advertisement
புதுடில்லி : எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்? என பலரையும் 56 நாட்களாக குழம்ப வைத்த காங்., துணைத் தலைவர் ராகுல், திரும்பி வருவதிலும் குழப்பம் ஏற்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி நள்ளிரவே ராகுல் டில்லி திரும்பி விட்டார் என ஒருபுறம் தகவல் வந்தது. மற்றொரு புறம், விமானம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணம் என்றும் இப்போது வருவார். பிறகு வருவார் என்றும் செய்திகள் வந்தது குழப்பத்தை அதிகப்படுத்தி உள்ளது.
லீவில் சென்ற ராகுல் :

பார்லி., மற்றும் டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடன், பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிய பிப்ரவரி 23ம் தேதி ராகுல் விடுப்பில் சென்றதாக காங்கிரஸ் தெரிவித்தது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய விவாதங்கள் நடைபெற்ற போது, பட்ஜெட் தொடரில் ராகுல் பங்கேற்கவில்லை. அவர் எங்கிருக்கிறார், எப்போது வருவார் என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்ட போதும், ராகுலின் அங்க அடையாளங்கள் குறித்து டில்லி போலீஸ் விசாரித்த போதும் காங்கிரஸ் தரப்பில் முறையான பதில் தரப்படவில்லை. பின்னர் அவர் எங்கிருக்கிறார் என தங்களுக்கே தெரியாது எனவும், வர வேண்டிய சமயத்தில் ராகுல் வருவார் எனவும் கூறி காங்கிரஸ் தலைவர்கள் பலர் மழுப்பினர்.

ராகுலுக்கு எதிர்ப்பு :

ராகுல் எப்போது வருவார் என உறுதியான தகவல் வெளி வராத நிலையில், அவர் ஓய்வு முடிந்து திரும்பியதும் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பார் என காங்.,கில் ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இருப்பினும், ராகுல் கட்சித் தலைவர் ஆவதற்கு மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்., மூத்த தலைவர் அம்ரிந்தர் சிங் உள்ளிட்டோரும் எதிர்த்தனர்.
சோனியாவே கட்சி தலைவர் பொறுப்பில் நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், ராகுல் ஒரு முழுநேர அரசியல்வாதி இல்லை. அவர் பொறுப்பற்றவர் என கடுமையான விமர்சித்தன.

எங்கு தான் இருந்தார் ராகுல்? :

கடந்த 56 நாட்களாக லீவ்வில் இருந்த ராகுல் அப்படி எங்கு தான் இருந்தார் என்ற கேள்விக்கு பல தரப்பட்ட பதில்கள் கூறப்படுகிறது. அவர் தெற்காசிய நாடுகளில் தங்கி இருந்தார் என்று ஒரு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. ரங்கூன், மியான்மர் ஆகிய நாடுகளில் ராகுல் தியான பயிற்சி எடுத்து வந்தார் என மற்றொரு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக அவர் சிம்லாவில் ஓய்வெடுத்து வருவதாக வாட்ஸ்அப் மற்றும் டுவிட்டரில் புகைப்படத்துடன் செய்திகள் உலா வந்தன.

அடுத்த திட்டம் என்ன? :

டில்லி திரும்பிய ராகுலை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்த காங்., தலைவரும் அவரது தாயாருமான சோனியாவும், சகோதரி பிரியங்காவும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். ராகுலுக்கு கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமா என கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஏப்ரல் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர்களையும், விவசாயிகளையும் ராகுல் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி நில மசோதாவை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கும் ராகுல் தலைமை ஏற்பார் என காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் ராகுலின் ஓய்வு முடிந்து விட்டாலும், கட்சிக்குள்ளும் ராகுலின் திடீர் ஓய்விற்கான காரணத்திலும் உள்ள குழப்பம் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

No comments: