Thursday 16 April 2015

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது?

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது?  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
திமுக மனுவை விசாரித்த 2 நீதிபதிகளில், நீதிபதி மதன் பி.லோகுர் திமுக மனு ஏற்புடையதே என்றும் நீதிபதி பானுமதி பவானி சிங் வழக்கில் தொடர்வதில் சட்ட விதிமீறல் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து திமுக மனு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. | செய்திக்கு - ஜெ. வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் மனுவை பேரமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம் |
மனு மீது மாறுபட்ட கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடையை நீட்டிப்பதாக ஏதும் கூறவில்லை. எனவே கர்நாடக நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வில் உள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இத்தைகய சூழலில், தி இந்துவுக்கு பேட்டியளித்த கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் படேல், "ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தீர்ப்பு நகல் வந்த் பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும்" என்றார்.
இருப்பினும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர். தீர்ப்புக்கு தடை நீட்டிக்கப்படாததால் இன்றைக்கே நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கக்கூடும் என அதிமுகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

No comments: